மீண்டும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது.

indian2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இந்தியன்’. அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை குறிப்பிட்டு வெளியான இந்த திரைப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. அதன்பிறகு இந்தியன் 2 திரைப்பம் எடுக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதில் நடித்து வரும் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டு வருவதால் தனக்கு இது கடைசி படம் என அறிவித்திருந்தார். இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்படும் என அறிவித்து ஓராண்டு கடந்த போதும் கமலின் அரசியல் பணி, 2.0 ரிலீஸ் உள்ளிட்ட பல காரணங்களால் படபிடிப்பு தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் கடந்த ஜனவரி 18ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்திலேயே சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

கமலுக்கு போடப்பட்ட இந்தியன் தாத்தா மேக் அப்பில் ஷங்கர் திருப்தி அடையாததாலும், மேக் அப் போடும் வேலையை சரி செய்வதற்காகவும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.