நாளை கமலஹாசன் – சோனியா காந்தி சந்திப்பு

 

டில்லி

நாளைக் காலை 11 மணிக்கு கமலஹாசன் சோனிய காந்தியை சந்திக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் ஆணையரை சந்தித்து கட்சிக்கு அங்கீகாரம் பெற டில்லிக்கு சென்றுள்ளார்.   விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அது குறித்து ஆணையம் எந்த காலக் கெடுவும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் இல்லத்தில் கமலஹாசன் சந்தித்தார்.   அத்துடன் அவர் சகோதரி பிரியங்கா காந்தியையும் கமல் சந்தித்தார்.   இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியும் இந்த சந்திப்பில் அரசியல்  பற்றி பேசியதாகவும் கூட்டணி பற்றி பேசவில்லை எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய தலைவர் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தியை நாளைக்காலை 11 மணிக்கு கமலஹாசன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.