பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.

சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் பிரமுகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில்,   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுபஸ்ரீயின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன்,  ” பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். பேனர் கலாசாரத்தை ஒழிக்க மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும்” இவ்வாறு அவர் கூறினார்