போபால்: மத்தியப் பிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் கோரிக்கையை முதல்வர் கமல்நாத் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தெளிவான தனிப்பெருபைான்மை கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை மிகவும் நெருங்கி 114 இடங்களில் வென்றது.

15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவோ, விரட்டி வந்து 109 இடங்களுடன் நின்றுபோனது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும் வென்றன. சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றார்கள்.

பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியமைப்பதை தடுக்க, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள், காங்கிரசுக்கு ஆதரவளித்ததால் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு மற்றும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை அடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது வலுவான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா.

ஆனால், “இந்த சவாலை தாம் சந்திக்க தயார் எனவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்தவித சிக்கலும் தனக்கில்லை” எனவும் கூறியுள்ளார் முதல்வர் கமல்நாத்.