ஜோதிராதித்யா தாராளமாக சாலையில் இறங்கி போராடலாம்: கமல்நாத்

இந்தூர்: சாலையில் இறங்கி போராட விரும்பினால், ஜோதிராதித்யா சிந்தியா தாரளாமாக போராடலாம்; அவருக்கு அதற்கான உரிமை இருக்கிறது என்று பதிலடி கொடுத்துள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்.

ஆசிரியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்யா, சொந்தக் கட்சியின் மாநில அரசையே குற்றம் சாட்டி, தேவைப்பட்டால் ஆசிரியர்களுக்காக சாலையில் இறங்கிப் போராடவும் தயங்கமாட்டேன் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அவரின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, கட்சிக்கு வெளியேயும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள கமல்நாத், “வாக்குறுதிகள் என்பது ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் விஷயம் இல்லை.

வாக்குறுதிகள் என்பது ஐந்து வருடத்திற்கானது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். விரைவில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என்று சிந்தியா கூறுகிறார். இது அவரின் கருத்து. அவருக்கு விருப்பம் இருந்தால் அவர் சாலையில் இறங்கிப் போராடலாம். நாங்கள் அவரை தடுக்கவில்லை. எல்லா கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் இருக்கிறது. உட்கட்சி பூசல்கள் எழுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜோதிராதித்யா சிந்தியா, கமல்நாத்திடம் அதைப் பறிகொடுத்ததில் இருந்து கடும் அதிருப்தியுடன் இருப்பது பலரும் அறிந்ததே.