செய்திகளை வழங்குவது உங்கள் ரவுண்ட்ஸ்பாய்.

இன்று நியூஸ் 18 (தமிழ்) தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல், “தீவிர இடதுசாரிகளாலும் ஆபத்து, தீவிர வலதுசாரிகளாலும் ஆபத்து” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது இரண்டு தத்துவங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ளலாமே தவிர, அப்படியே ஏற்க தேவையில்லை என்கிற அர்த்தத்தில் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

தான்  கூறிய தத்துவமான “அண்ணாயிசத்துக்கும்”  எம்.ஜி.ஆர். இப்படித்தான்வி ளக்கம் அளித்தார்.

1973ம் ஆண்டு சோவியத் யூனியன் நாட்டுக்கு சென்று திரும்பினார் எம்.ஜி.ஆர். அந்நாட்டு புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிச கொள்கையைப் பற்றி தீவிரமாக சிந்தித்தார். மேலும், அண்ணாவின் பெயரில் தான் துவங்கிய கட்சியின் கொள்கைக்கும் அண்ணாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று விரும்பினார்.

இந்த நிலையில், 1979ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இரவு யு.என்.ஐ. மற்றும் பி.டி.ஐ. செய்தி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு செய்தியாளர்களை அனுப்பி வைக்கும்படி கூறினார். அவர்கள் வந்ததும், “அ.தி.மு.க.வின் கொள்கை அண்ணாயிசம். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்” என்றார்.

“ஒரே வரியில் சொல்கிறீர்களே..” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எம்.ஜி.ஆர்., “மாவோயிசம், மார்க்சிசம் என்றெல்லாம் இல்லையா.. அது போலத்தான் அண்ணாயிசம்” என்றார்.

ஹி ஹி...எம்.ஜி.ஆரின் அண்ணாயிச அறிவிப்பு மறுநாள் செய்தித்தாள்களில் வெளியானது.  உடனே, மற்ற செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் எம்.ஜி.ஆரின் தி.நகர் இல்லத்துக்கு படையெடுத்தனர்.

அவர்கள், “அண்ணாயிசம் என்றால் என்ன” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டனர்.

அதற்கு எம்.ஜி.ஆர்., “காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய தத்தவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக்குமோ அதுதான் அண்ணாயிசம்” என்று விளக்கம் அளித்தார்.

இது பலருக்கும் புரியவில்லைா. எம்.ஜி.ஆரின் கருத்து செய்தித்தாள்களில் வெளியான பிறகும், பலரும் இத்தத்துவம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்தனர்.

ஆனாலும் 1977ல் முதன் முறையாக வென்று ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார்.

இந்த நிலையில், தற்போது கமல், ““தீவிர இடதுசாரிகளாலும் ஆபத்து, தீவிர வலதுசாரிகளாலும் ஆபத்து” என்று தெரிவித்திருப்பது, எம்.ஜி.ஆரின் அண்ணையிச கொள்கை போலவே இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரைப்போல திராவிடக் கட்சியில் கமல் இருந்ததில்லை என்றாலும் திராவிட கொள்கை மீது பற்று கொண்டவர். சமீபத்திய தனது பேச்சுகளிலும் இதை வலியுறுத்தி உள்ளார். தவிர எம்.ஜி.ஆர். போலவே, மகாத்மா காந்தி கொள்கைகளலும் கமலுக்கு பிடிப்பு உண்டு.

மிக முக்கியமாக.. எம்.ஜி.ஆர். அறிவித்த அண்ணாயிசம் பலருக்கு புரியாதது போலவே, கமலின் அரசியல் ட்விட்டுகள் பல பெரும்பாலோனோருக்கு புரியவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

ஆகவே எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்தான் கமலின் கொள்கையாக இருக்குமோ என்ற கருத்து பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், “கமல் வித்தியாசமானவர். ஆகவே அண்ணாவை மட்டும் அவர் முன்னிறுத்தமாட்டார். அண்ணா,காந்தி, காஸ்ட்ரோ, மார்க்ஸ், ஒபாமாயிசம் என்று அனைத்து இசங்களையும் சேர்த்து அறிவிப்பார்” என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.