மாணவர்களுக்கு காமராஜர் விருது! செங்கோட்டையன்

சென்னை,

மிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் தமிழக அரசு, தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

நேற்று ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது என்ற புதிய அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில், இன்று மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  மாணவர்களை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பாடத்துடன் நற்பண்புகளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று  அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும். மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

விருதுடன் பரிசுத்தொகையாக 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் கிடைக்காத மாணவர்களுக்கு, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.