சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளா  அண்ணா, காமராஜர் பெயர் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், சென்னை உள்நாட்டு முனையத்துக்கு, காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று மறைந்த மத்தியஅமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தி,  போராடி பெற்ற நிலையில், தற்போது  காமராஜர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்கென இரண்டு டெர்மினல்கள் உள்ளன. சர்வதேச டெர்மினலுக்கு மறைந்த முதல்வர் அறிஞர் அண்ணா பெயரும், உள்நாட்டு  டெர்மினலுக்கு கர்மவீரர் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.  தற்போது,  விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் டெர்மினல்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள், இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விமான நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.  புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் காமராஜர் பெயர் இடம்பெறாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், உள்நாட்டு டெர்மினலுக்கு மீண்டும் காமராஜர் பெயரை  உடனே வைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  தலைவர் வாழப்பாடியார அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1989-90 களில் மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பிறகு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. மீண்டும் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில்,  சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய டெர்மினல்களுக்கு எம் ஜி ராமச்சந்திரன் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அது இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், விமான நிலையத்தில் இருந்து அண்ணா, காமராஜர் பெயர் அகற்றப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிராமச்சந்திரன் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தின் பெயர் அகற்றப்பட்டது குறித்து,  ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அதில்,விமான நிலையத்தின் பெயரை மாற்றும் திட்டம்  இல்லை. புதிய டெர்மினல் பணிகள் நிறைவடைந்தவுடன், புதிய கட்டடங்களுக்கு காமராஜர் பெயர் பலகை பொருத்தப்படும் என்று கூறியுள்ளது.