கங்கணா ரணாவத் செய்த கடுமையான விதி மீறல் : குடியிருப்பு இடிப்பு வழக்கில் கோர்ட் கண்டனம்

மும்பை

டிகை கங்கணா ரணாவத் குடியிருப்பு இடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பில் அவர் கடுமையான விதி மீறல் செய்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் தேதி மார்ச் மாதம் நடிகை கங்கணா ரணாவத் அவரது குடியிருப்பினுள் அனுமதி இன்றி சில கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது.  அதற்கு அவர் பதில் அளிக்காததால் மற்றொரு நோட்டிஸ் அளிக்கப்பட்டது.  அதில் அவர் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் படி கட்டிடத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கட்டடம் இடிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டிசை எதிர்த்து கங்கணா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் மாநகராட்சி தனது கட்டிடத்தை இடிக்கத் தடை கோரி இருந்தார்.  இதையொட்டி நீதிமன்றம் அந்த கட்டிடத்தை முன்பிருந்தபடியே இருக்கலாம் என அனுமதி அளித்தது.  ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி மும்பை மாநகராட்சி அவருடைய குடியிருப்பில் அனுமதி இன்றி கட்டப்பட்டிருந்த பகுதிகளை இடித்தது.

இதை எதிர்த்து அவர் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 23 அன்று கங்கணாவுக்கு எதிராக வழங்கப்பட்டது.  தீர்ப்பின் முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  அந்த தீர்ப்பில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு தேவை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி எல் எஸ் சவான் கங்கணாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பில், ‘கங்கணா ரணாவத் மும்பையில் கேர் பகுதியில் உள்ள 16 மாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் 3 ஃபிளாட்டுகளை சொந்தமாக வைத்துள்ளார்.  இந்த மூன்று ஃபிளாட்டுகளையும் மாநகராட்சி அனுமதி இன்றி ஒன்றாக இணைத்துள்ளார்.   இதனால் அவர் திறந்த முற்றம், குழாய் பகுதிகள், உள்ளிட்ட பலவற்றைத் தனது ஃபிளாட்டுகளுடன் இணைத்துள்ளார்.  இது கட்டிட அனுமதியை மீறிய கடுமையான சட்ட மீறல் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.