காஞ்சிபுரம்: மாநில அரசுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் அருகே கரப்பேட்டையில் அமைந்த அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவ மையம், சிறப்பு மருத்துவ ஆய்வு மையமாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சுமார் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தப் புற்றுநோய் மருத்துவமனை, மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தொடர்ந்து இயங்கிவருவதோடு, புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சையளித்தல், புற்றுநோய் பதிவேட்டைப் பராமரித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணைநிலை மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல் உள்ளிட்டோருக்கு பயிற்சியளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

இதற்கு முன்னதாக, அடையாரில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கான மாநிலத்தின் தலைமை மருத்துவமனையாகவும், சிறப்பு ஆய்வு மையமாகவும் ரூ.120 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டது.

மேலும், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில், ரூ.58.69 கோடி செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில், 13 நபர்களில் ஒருவர், புற்றுநோய்க்கு ஆளாகும் ஆபத்தில் இருப்பதாக பதிவகத் தகவல் தெரிவிக்கிறது. எனவே, அதிகளவிலான நோயாளிகளை சமாளிக்கும் வகையில் மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கூறப்படுகிறது.