காஞ்சிபுரம் : நாய் கடித்து ஒருவர் பலி

நாய் கடித்ததால்  ஒருவர் மரணமடைந்தது காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், (வயது 47. இவர், காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.

இவருக்கு, சித்ரா என்ற மனைவியும், முனீஸ்வரன், முத்துமணி, என்ற மகன்களும்  கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர்.

ஒரு வருடத்துக்கு முன், அவரை நாய் ஒன்று கடித்துவிட்டது. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கை வைத்தியம் பார்த்தார்.  புண் குணமானதும் அதை மறந்து விட்டார்.

ஆனால் சமீப நாட்களாக அவருக்கு வேறு விதமான அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.  இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் நாய் கடி விஷம் (ரேபிஸ்) முற்றியதால் , வியாழக்கிழமை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ரத்த பரிசோதனை செய்ததில், காய்ச்சலுக்கும், ரத்த பரிசோதனைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்துள்ளது.

பிறகு அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, நாய் கடித்ததை தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சென்னை அரசு மருத்துவமனைக்கு, உடனடியாக அனுப்பியுள்ளனர். அங்கு, உள்நோயாளியாக சேர்த்து, அவரை தனி அறையில் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளனர்.

மேலும், ரேபிஸ் நோய் முற்றியதால், ஓரிரு நாளில் அவர் இறந்து விடுவார் எனவும், அதன் பின் உடலை மருத்துவமனையிலேயே எரித்து விடுவோம் என, கூறினர்.

இதனால், பயந்து குடும்பத்தார், சேகரை அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான ராஜபாளையத்திற்கு சென்றனர். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை இறந்து விட்டார்.

இதுகுறித்து, பரந்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஜய் வெங்கடேஷ் தெரிவித்ததாவது:

“எங்களிடம் அவர் சிகிச்சை பெற வரவில்லை. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, எனக்கு தகவல் வந்தது. நான் அங்கு சென்று பார்த்தபோது, ஆபத்தான நிலையில் இருப்பதால், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரைத்தேன். அவர்கள் தகவல் தெரிவிக்காமல் ஊருக்குச் சென்று விட்டனர்.’ரேபீஸ்’ நோய் பரவாமல் இருக்க, அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஊசி போட வேண்டிய அவசிய மில்லை” என்று அவர் தெரிவித்தார்.