காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் அம்பேத்கர் படத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டதை அடுத்து அங்கு வரையப்பட்டிருந்த இந்து கடவுள், மற்றும் கோயில் படங்களை வி.சி.க.வினர் அழித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் கைலாசநாதர், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர், வரதராஜபெருமாள் கோவில்களின் தோற்றத்தை வண்ண ஓவியங்கள் சுவர்களில் தீட்டபட்டுள்ளன.

மேலும், ஆதிசங்கரர், ராமானுஜர், சந்திரசேகரேந்திரர், உள்ளிட்டோரின் படங்களும் வரையப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி, மக்கள் மன்றம் என்கிற அமைப்பைச் சேர்ந்த ஜெர்சி, மகேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக ஊடக அமைப்பாளர் யுவன் ஆகியோர் தலைமையில் வந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் இந்த ஓவியங்கள் மீது வெள்ளையடித்து அழித்தனர்.

மேலும் அங்கு அம்பேத்கர் படத்தையும் வைத்துச் சென்றனர்.

“இந்து மதத்தையும் பார்ப்பனியத்தையும் காட்டும் வகையிலான படங்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் உள்ளன.  ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அகற்றப்பட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்துக்கோவில்கள், கடவுளர் படங்கள் வெள்ளையடித்து அழிக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் புகார் எதுவும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் இந்து கடவுள்களின் படங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே ரயில் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டது குறித்து விளக்கம் கேட்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அங்கு செல்ல இருப்பதாகவும், அவருக்கு கருப்புக் கொடி காட்ட இந்து அமைப்பினர் முடிவு செய்திருப்பதாகவும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.