கேரளாவுக்கு காஞ்சி சங்கர மடம் ரூ. 25 லட்சம் நிதி உதவி

காஞ்சிபுரம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காஞ்சிபுரம் சங்கர மடம் ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.   மக்களில் பலர் வீடிழந்துள்ளனர்.   வெள்ளத்தால் சுமார் ரூ.20000 கோடி அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.   அனைத்து மாநில அரசுகளும் உதவி அளித்து வருகின்றன.   தனியாரும் பெருமளவில் நிதி அளித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டில் மற்றவர்களின் துயரத்துக்கு ஓடோடி சென்று உதவுவடு வழக்கமாகும்.   நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.   காஞ்சி சங்கா மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகள் வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சங்கர மடத்தின் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் உதவித் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   அத்துடன் பக்தர்கள் தங்களால் முடிந்த உதவியான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற நிவாரண பொருட்களை காஞ்சி மடத்தில் அளிக்கலாம்.   அத்துடன் மடத்தின் அனைத்துக் கிளைகளிலும் நிவாரணப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது.