காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சங்கரமடத்தின் அருகே அமைந்துள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரன் உடல் பூஜை புனஸ்காரங்களுன் ஆகம விதிப்படி உட்கார்ந்த நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரன் நேற்றுகாலை ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து,  அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் நேற்று முதல் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் முக்கிய நபர்கள் ஆன்மிக தலைவர்கள், அரசியல் கட்சியினர்  வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

தமிழக அரசின் சார்பாக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், சதானந்தகவுடா உள்பட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

இன்று காலை 8 மணிமுதல் சங்கரமட நடைமுறையின்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்தன.  தொடர்ந்து, அவரது உடலுக்கு  அபிசேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு ஜெயேந்திரருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதையடுத்து அவரது உடல், ஏற்கனவே .’மகா பெரியவர்’ என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான  ‘பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரரின் உடலும் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, சுமார் 10.00 மணி அளவில் அவரது உடல் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழிக்குள் இறக்கப்பட்டு, ஆன்மிக முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சி சங்கராச்சாரியார் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நடைபெற்ற கடைசி நேர சடங்கு (வீடியோ) கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்… 

https://www.youtube.com/watch?v=yVkROGOeqbo