காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும்  கடைகளை தவிர பிற கடைகளை மூட மாவட்ட  கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட 75 நகரங்களை முடக்கி தனிமைப்படுத்த  மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

வெளிமாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று போலீசார் தரப்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.