வடகலை தென்கலை பிரச்சினை: காஞ்சிபுரம் தேவராஜசாமி கோவிலில் தமிழ் பிரபந்தம் பாட உயர்நீதி மன்றம் தடை

சென்னை:

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், பிரபந்தம் பாடுவது தொடர்பாக அங்குள்ள ஐயர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, அடுத்த உத்தரவு வரும்வரை தமிழில் பிரபந்தம் பாட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தம் பாடப்படுவதில், அங்குள்ள ஐயர்களிடையே பிரச்சினை மூண்டது.  இதுதொடர்பான வழக்கில்,  அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழில் பாடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14வது நூற்றாண்டிலேயே வைஷ்ணவர்களுக்குள் வழிபாட்டு முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.  வேதாந்த தேசிகரின் சமஸ்கிருத வேதத்தை பின்பற்றி வழிபாடு செய்வது ‘வடகலை’ என்றும், ஆள்வார்களின் பிரபந்தத்தை வழிபாட்டு முறையாக கொண்ட மணவாள மாகமுனியை பின்பற்றிய வர்கள் ‘தென்கலை’ என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

தேவராஜ சுவாமி கோவிலில் தமிழில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள் பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பிரமோற்சவத்தின்போது,  தென்கலை பிரிவினர் ஒரு பிரிவாகவும், வடகலை பிரிவினர் ஒரு பிரிவாகவும் பிரிந்து சுவாமியுடன் ஊர்வலமாக பாசுரங் களையும், வேதமந்திரங்களையும் முழங்கியபடிச் சென்றனர். இவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் காவலுக்க சென்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமி ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த விவகாரம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஸ்ரீநிவாஸன் என்பவர், தமிழில் பிரபந்தம் பாட தடை விதிக்க கோரி  மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இநத் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, இது தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வரும் வரை, கோவிலில்  தமிழில் பிரபந்தம் பாட தடை விதித்தார்.

மேலும், கோவில் என்பது அனைவரின் வழிபாட்டுக்கு உரிய இடம் என்றும், இதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்த  நீதிபதி வேதனை தெரிவித்தார்.

உலகம் இருக்கும் வரை, இந்த வேறுபாடு தீராது போலும். நாங்கள், மனித குலம் என, கூறிக்கொள்வோர், முதலில், மனித குலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் தங்களுக்குள் குல உயர்வு பார்ப்பதை விடுத்து, எல்லோரும் மனிதகுலம் என்பதை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் தென்கலை, வடகலை பிரச்சினை தொடர்பான முதலில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.