சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000 ‘இபோஸ்ட்’ புகார்: காஞ்சிபுரம் கிராம மக்கள் நூதன போராட்டம்

காஞ்சிபுரம்:

சாலையை சீரமைக்க வலியுறுத்தி  காஞ்சிபுரம் அருகே உள்ள கிராம மக்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இபோஸ்ட் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளனர். கிராம மக்களின் இந்த நூதன போராட்டம் பரபரப்பாக பேசப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வண்டலூரை அடுத்து கீரப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி யின் கீழ்  கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் போன்ற குக்கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்த கிராமங்களில் சுமார்  7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் ஊர்களுக்கும் செல்லும் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம்  சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது  என்று கூறி, சாலைகள் அமைப்பது தடுக்கப்பட்டு வருகிறது.

சுமார் 19 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து பல முறை அரசு தரப்புக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக வெகுண்டெழுந்த அந்த கிராம மக்கள் அரசுக்கும், வனத்துறைக்கும் எதிராக போராட்டம் நடத்தினர்.  இதுகுறித்து விரிவான மனு எழுதி, சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000இ-போஸ்ட் தயார் செய்து வைத்துள்ளனர். இதில் 100 மனுக்கள் முதல் கட்டமாக குடியரசு தலைவராக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அவர்கள் அனுப்பி உள்ள மனுவில்,  மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 14 கி.மீ கொண்ட ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலை சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது.

இச்சாலையை 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்தி வருகின்றனர். இச்சாலை யில் காட்டூரிலிரிந்து அருங்கால் வரையிலும், இதுபோல் நல்லம்பாக்கத்திலிருந்து ஊளை மாஞ்சேரி கிரஷர் பகுதி வரையிலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை உள்ளதால் அதற்கு இரண்டு மடங்கு இடம் ஒதுக்கி கொடுத்தால்தான் நெடுஞ்சாலை துறையினருக்கு சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என்று கூறி வனத்துறை குறுக்கிட்டுள்ளதால் மேற்படி சாலை அமைக்கும் பணி கடந்த 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளத .

இதில் மேற்படி சாலைகளில் இயங்கி வந்த வழித்தட எண் 60கே, 60டி என்ற தமிழக அரசு பேருந்து களும், 55டி என்ற இரண்டு மாநகர பேருந்துகளும் கடந்த 10ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது . இதேபோல் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கி வைத்த எஸ்5 என்ற இரண்டு மினி மாநகர பேருந்துகளும் தற்போது கடந்த ஒரு வருடமாக மேற்படி தடத்தில் பஸ் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது .

இதனால் காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், கல்வாய் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.

மேலும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு பொதுமக்களாகிய எங்களை முட்டாளாக்கி வருகின்றனர். எனவே குடியரசு தலைவர் தலையிட்டு வனத்துறையின் முட்டுகட்டையால் கடந்த 19ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்ட ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் பிறகாவது தமிழக அரசு கண் திறந்து சாலைகள் அமைத்துக்கொடுக்குமா என அப்பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.