அயோத்தி பூமி பூஜைக்கு காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பூஜை பொருட்கள் சென்றன

காஞ்சிபுரம்

நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்காக காஞ்சி சங்கரமடம் தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன  நாளை நடைபெறும் பூமி பூஜையில் பிரதம்ர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.  இதற்காக அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டு கோலாகலமாகக் காணப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   அழைப்பாளர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வ்து சுவாமிகள் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”வரும் 5 ஆம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி சங்கர மடத்தில் இருந்து பூஜைப் பொருட்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கலசம், பட்டுத் துணி உள்ளிட்டவை அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்ரீராமர், விநாயகருடன் கூடிய ஒரு புகைப்படமும் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக கோயிலில் இந்தப் படம் வைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் இருந்து புனித மண்ணும் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து நீடித்து வந்த ராமர் கோயில் பிரச்சினை தற்போது சுமுகமாக முடிந்துள்ளது.  ராமர் கோயில் அமைய வேண்டும் என்பதற்காக இந்த மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

அவர், அனைத்து சமுதாய தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து கோயில் அமைக்கப் பூஜை நடத்த இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அயோத்திக்கும் தமிழகத்துக்கும் நீண்டகாலமாகத் தொடர்புகள் உண்டு. பழம்பெருமை வாய்ந்த ராமர் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜையின்போது மக்கள் “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்” என்ற மந்திரத்தை 108 முறை வீட்டில் இருந்தபடியே ஜெபம் செய்ய வேண்டும்.

ராமர் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் போலவே பசுவைக் காப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.