நெல்லை: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில்  கடற்கரையில் பிரமாண்டமாக நடைபெறும்  சூரசம்ஹாரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில்  நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக வரும், 20-ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 21-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். இவ்விழாக்களில் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் அங்கு திரள்வர்.

ஆனால், தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், இந்த ஆண்டு விழாவில் கலந்துகொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாதுஎன்றும், கோவில் பிரகாரத்திலேயே நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சூரசம்ஹாரம் ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயில் அருகில்உள்ள கடற்கரையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு கரோனா பரவலால், கோயில் பிரகாரத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெறும். இந்நிகழ்ச்சியிலும், 21-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்குள் மற்றும் கோயில் வளாகத்தில் தங்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ, திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள், மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்துதங்கவோ, கடற்கரை பகுதிக்கு செல்லவோ அனுமதி இல்லை.

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதில், 50 சதவீதம் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவர்.

கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர்வீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை. கோயில் மூலம் அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.

சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்துநிகழ்வுகளையும் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் மூலம்நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுசெய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.