கந்தசஷ்டி விழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தடை

மதுரை: கந்த சஷ்டி விழாவையொட்டி,  திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழா மறறும் சூரம்சஹார நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் ஆணையர் அறிவித்து உள்ளார்.

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பெரும் சிறப்பு வாய்ந்தது.  இந்த திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக  சூரசம்ஹாரம் நடைபெறும். இதைக்காண அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு திரள்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கந்தசஷ்டி திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், கோயிலுக்கு உள்ளேயே, உள் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ஆம் தேதி பக்தர்களை தவிர்த்து, சுவாமிக்கு மட்டும் காப்புக்கட்டும் நிகழ்வும், தொடர்ந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகள் கோயிலுக்கு உள்ளேயே, உள் திருவிழாவாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, கோயிலுக்கு வருவதை தவிர்த்து, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்புக்கட்டி கொண்டு, சுவாமியை வழிப்படுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.