இன்று முடிவடையும் கந்த சஷ்டி ஐப்பசி மாதம் அமாவாசை தொடங்கி ஆறு நாட்கள் நடை பெறுகிறது.  இந்த ஆறு நாட்களிலும் விரதம் இருப்பது விசேஷம் என்றாலும் முடியாதவர்கள் இன்றாவது விரதம் இருப்பதன் மூலம் முருகப்பெருமான் அருளைப் பெறலாம்.   முக்கியமாக இந்த ஆறுநாட்கள் விரதம் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மேற்கொள்வது.   பழமொழியான சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதற்கு உண்மையான பொருள் சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையான கருப்பையில் குழந்தை வரும் என்பதே ஆகும்.

விரதம் இருப்பவர்கள் மிக எளிமையான சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.   அதுவும் பகல் நேரம் மட்டும் பச்சரிசி உணவு, தயிருடன் உண்ண வேண்டும்.  இரவில் பால், பழங்கள் சாப்பிடலாம்.  ஆனால் தற்போது பலர் அசைவத்தை தவிர்த்து விட்டால் போதும் என எண்ணுகின்றனர்.  அது தவறாகும்.  வயோதிகர்கள், நோய் வாய்ப் பட்டவர்கள் ஆகியோர் இருவேளை உணவுடன் இருப்பது கடினம் ஆதலால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம்.   இருவேளையும் நீராடி முருகனை வணங்கி கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும்.   அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சூரனை சம்ஹாரம் செய்த தினமான கந்த சஷ்டி அன்று நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி அனைத்து சாமி படங்களுக்கும் மலர் இட்டு, முருகனின் சிலையை அல்லது படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.  உங்களுக்கு தெரிந்த முருகனின் துதி எதுவும் சொல்லலாம்.  கந்த சஷ்டி கவசம், போன்றவை சொல்வது நல்லது.   பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பாயசம் ஆகியவற்றை நிவேத்யம் செய்த பின் தீபாரதனையுடன் பூஜையை முடிக்க வேண்டும்.

அவசியம் முருகன் கோவிலுக்கு செல்வதோ அல்லது அருகில் உள்ள ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் வணங்கி விரதத்தை முடிக்க வேண்டும்.