Random image

முருகன் கோவில்களில் நாளை ‘கந்த சஷ்டி’ விழா தொடக்கம்

ந்தனின் பிறப்பின் மகிமையை எடுத்துக்  கூறும் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்  நாளை தொடங்குகிறது. இந்த விழா உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடாம் முருகனின் ஆறு கோயில்களில் கந்த சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாத வளர்பிறை பிரதமையில் ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழா  கடைசி நாளான சஷ்டி அன்று, சூர சம்ஹாரத்துடன் முடிவடைகிறது.  அசுர பொம்மைகளை எரித்த பின் ,முருகன் சூரபத்மனை அழிக்கும் காட்சி நடைபெறுகிறது.

கந்த சஷ்டி நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் வழிபாடு நடைபெறுகின் றன. பக்தர்கள் கந்த சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானை வணங்குகிறார்கள்.

காவடி, பால் குடம், மற்றும் பல விதமான நேர்த்தி கடன்களை  செலுத்தி பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்

கந்த சஷ்டி விரத முறை

கந்த சஷ்டி விரதமிருப்பவர்கள் ஆறு நாளும் விரதமிருப்பர்கள்.

பொதுவாக அசைவ உணவு உண்பதில்லை.வெங்காயமும் பூண்டும் தவிர்த்து விடுவார்கள்.

அதி காலை எழுந்து ,குளித்து,முருகனின் படத்திற்கு முன் வணங்கி  விளக்கு ஏற்றி,’கந்த சஷ்டி கவசம்’,’சுப்பிரமணிய புஜங்கம்’ போன்ற ஸ்லோகங்களை சொல்ல வேண்டும்.

ஒரு பொழுது உணவு உண்பவர்கள் மாலையிலோ,காலையிலோ,சிற்றுண்டி உண்பது உண்டு.

பால்,பழம் தண்ணீர் மட்டும் அருந்துபவர்கள் உண்டு.

தினமும் கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுவார்கள்.

கந்த சஷ்டி விரதமிருந்தால்,வாழ்வில் வளமும்,மனத் தூய்மையும் கிடைக்கும் என்பது உறுதி.

மகப்பேறில்லாத பெண்கள் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.

இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று பழமொழியாக சொல்லி வைத்தார்கள். நாளைய தினம் கிருஷ்ண பட்ச சஷ்டி. தீபாவாளிக்கு அடுத்து வரும் அமாவாசைக்கு பின்னர் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது

இத்தனை ஆண்டுகளாக சஷ்டி விரதம் இருக்காதவர்கள் இனி இருந்து பாருக்க அழகன் முருகனின் அருள் கை மேல் கிடைக்கும்.

திருச்செந்தூர்

சஷ்டிக்கு பேர்போனது அறுபடை வீடுகளில் இரண்டாம் விடான திருச்செந்தூர். நாளை கந்த சஷ்டி விழா தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏராளமானோர் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து சஷ்டி விரதம் அனுசரிக்கும் வகையில் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றன்ர.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நாளை அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி, வரும் 13ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெறவுள்ளது.

அதன்பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் அதிகாலை 5.30 மணியளவில் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா நாளை உச்சிகால பூஜையின் போது காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

வரும் 13-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதன் பின் மதியம் 2.30 மணிக்கு நடை சாத்தப்படும்.

வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்க முக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.

சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை மணம் முடித்து கொடுக்கும் நிகழ்வாக நவம்பர் 14-ந் தேதி மலைக் கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

மேலும் அன்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கால்யாணம் நடை பெறுகிறது. கந்த சஷ்டிக்கென விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நாளை பழனி மலைக் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியதும் தங்கள் விரதத்தை தொடங்கு வார்கள்.

இதுபோல அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சஷ்டி விரதம் தொடங்குகிறது.