டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய காங்கேயம் திமுக பிரமுகர் கைது…

திருப்பூர்

காங்கேயத்தில் டாஸ்மாக் ஊழியர்களுடன் சேர்ந்து மது கடத்தி விற்பனை செய்த திமுக நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 720 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த 7ந்தேதி திறக்கப்பட்டு 2 நாள் விற்பனை நடைபெற்ற நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவு காரணமாக மீண்டும் மூடப்பட்டது.

இநத நிலையில், திருப்பூர் அருகே உள்ள காங்கேயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை அங்கு பணியாற்றிய ஊழியர்களுடன் சேர்ந்து கடத்தி, வாகனங்களில் எஎடுத்துச் சென்றனர்.

இவர்களை இரவு ரோந்து காவல்துறையினர் மடக்கி சோதனை செய்த போது, காரிலும், 2சக்கர வாகனங்களிலும் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து காரில்  மதுபாட்டில்களை கடத்திய திமுகவின் காங்கேயம் நகர பொருளாளர் மகேஷ்குமார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் திருமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் தனியார் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மகேஷ் குமாரின் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து  720 மது பாட்டில்களை காங்கேயம் காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக போராடி வரும் நிலையில், திமுக பிரமுகரே மதுபாட்டில்களை கடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.