டில்லி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக கன்னையா குமார் பதவி வகித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுச் செயலரான சுதாகர் ரெட்டி உடல் நிலை காரணமாக பதவி விலகுகிறார். அவருடைய பதவிக்கு டி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சுதாகர் ரெட்டி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். தற்போது கம்யூனிஸ்ட் கட்சி பல இந்தி பேசும் மாநிலங்களில் கடும் தோல்வி அடைந்து வருகிறது. மேலும் இந்த கட்சிக்கு இளம் தலைவர்கள் இல்லாத நிலை உள்ளது. அதற்காக கன்னையா குமார் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கன்னையா குமார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுசராய் தொகுதியில் பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மும்முனைப் போட்டியில் பாஜகவிடம் தோல்வி அடைந்த போதிலும் கன்னையா குமார் இரண்டாம் இடத்தை பிடித்தார்.