பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி , கம்யூ கட்சிகளின் மகா கூட்டணிக்கு ஆதரவாக கன்னையா குமார் தேர்தல் பிரசாரம்…

பாட்னா: பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கு கன்னையா குமார் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் இருப்பதால் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியின் சீண்டல் நடவடிக்கைகளால் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கடும் அதிருப்தியில் இருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமாரை கடுப்பேற்றும் வகையில் லோக் ஜனசக்தி, நாளிதழ்களில் சமீபத்தில் முழு பக்க விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையாகி உள்ளது.

 ஜேடியூ- பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் கட்சி சில நாட்களுக்கு முன்னர்தான் இணைந்தது. காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணிக்கு தாவியிருக்கிறார் மஞ்சி.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளனர்.  காங்கிரஸ்- ஆர்ஜேடி இடதுசாரி கட்சிகளுடன்,  நிதிஷ்குமாருடன் முரண்பட்டு நிற்கும் மூத்த தலைவர் சரத்யாதவும் ஜேடியூவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான தேர்தல் சூழலில், காங்கிரஸ் ஆர்ஜேடி, கம்யூ கூட்டணிக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் தலைவர், கன்னையா குமாரை முன்னிலைப் படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரசாரம் செய்ய திட்டம் வகுத்துள்ளது.  தற்போதைய அரசியலில் சூழலில்,  லாலு போன்ற மக்கள் அபிமானம் பெற்றவர்கள் களத்தில் இல்லாத நிலையில், கன்னையா குமார் கூட்டணி கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் இறங்க உள்ளார். அவரது  பிரசாரம், ஆர்ஜேடி காங்கிரஸ் கம்யூனிஸ்டு  கூட்டணிக்கு உதவுமா என்பது தேர்தல் முடிவின்போது தெரிய வரும்.