சென்னை:

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கனிமொழி தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆவார் என்ற யூகம் பரவ ஆரம்பித்திருக்கிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் கருணாநிதியின் மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற ஐயத்தில் ஆ.ராசா சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழியும் சிறைவாசம் அனுபவித்தார். பிறகு இருவரும் ஜாமீனில் வெளவந்தார்கள்.

இந்த நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதே போல காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், “கனிமொழி இனி மேலும் தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபடுவார்” என்றும், “தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக ஆகக்கூடும்” என்றும் தகவல் பரவியிருக்கிறது.

திமுக துணைப் பொதுச்செயலராக பொறுப்பு வகித்த சற்குணபாண்டியனின் மறைந்த பிறகு, அந்த இடத்துக்கு  எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.