குளங்களை தூர்வார கூட அதிமுக அரசு முன்வருவதில்லை என தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, “தண்ணீர் பிரச்சினையை திமுக அரசியலாக்குகிறது என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். தண்ணீர் பிரச்சினையே தமிழகத்தில் இல்லை என்று அவர்கள் கூறும் போது, போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய எங்களுக்கு அவசியம் உள்ளது. ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க கேரள முதல்வர் முன்வந்தார். ஆனால், எங்களிடம் தண்ணீர் இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்ததாக செய்தி வருகிறது. தமிழக முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு 9 ஆயிரம் லிட்டர் வீதம் தினமும் 3 முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. அரசியலாக்க வேண்டுமென்றால், இதை அரசியலாக்கி இருக்க முடியும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அதிமுக அரசு தயாராக இல்லை.

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட எந்தவொரு திட்டத்தையும், அதிமுகவினர் சரியாக பராமரிப்பதும் இல்லை, நிறைவேற்றவதும் இல்லை. தற்போது எந்தக் குளத்திலும் தண்ணீர் இல்லை. இந்நேரத்தில் நீர்நிலைகளை தூர்வாரினால், மழை பெய்யும் போது தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் நீர்நிலைகள், நீர்வரத்து வழித்தடங்கள் மண் மூடி தான் காணப்படுகின்றன. தண்ணீர் பிரச்சினையை சரி செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை திமுக முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த எம்.எல்.ஏ கீதாஜீவன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.