பெங்களூரு: பெங்களூருவில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த காணொளியில் கன்னட நடிகர் அருண் கவுடாவும் அவருடைய நண்பர்களும், திரையரங்கு ஒன்றில் நான்கு பேரை நிற்க வைத்து அவமானப்படுத்துவதாக உள்ளது.

“மூன்று மணிநேரம் அமர்ந்து திரைப்படம் பார்க்க முடிகிற உங்களுக்கு 52 விநாடிகள் நாட்டுக்காக செலவிட முடியாதா? நீங்கள் என்ன பாகிஸ்தான் தீவிரவாதிகளா?“, இவ்வாறு ஒருவர் பேசுவதாக அந்த காணொளி துவங்குகிறது.

இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருக்கின்றனர், அவர்களை சூழ்ந்து நடிகர் அருண் கவுடாவும் மற்றவர்களும் கடுமையாகப் பேசுகின்றனர். “நமது ராணுவ வீரர்கள் காஷ்மீரில் நாட்டுக்காக உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், உங்களுக்கு தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க முடியாதா? இங்கிருந்து போங்கள்“, என்று கூறியதோடு ஆட்களை விட்டு அவர்களைத் திரையரங்கை விட்டு பலவந்தமாக அகற்றச் சொல்கின்றனர்.

இவ்வாறாக தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காமல் போனதற்காக ஆட்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இவ்வாண்டு மே மாதத்தில், ஒரு சவுண்ட் என்ஜினியர் திரைப்படம் பார்க்க வந்திருந்தவர்களால் அவமானப்படுத்தப் பட்டார். அவர்கள் அவரை பயமுறுத்தி, மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம், மாக்ரத் சாலையில் உள்ள கருடா மாலில் நடந்துள்ளது. அப்போது அந்தத் திரையரங்கில் அவென்ஜர்ஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது,

2016 இல் உச்ச நீதி மன்றம்,“திரையரங்கில் தேசிய கீதம் ஒலிபரப்பினால் அனைவரும் எழுந்து நிற்பது அவசியம்“, என்று கூறியுள்ளது. அந்த ஆணையில், “இது ஒருவரின் மனதில் உறுதியான தேச பக்தி மற்றும் தேசிய உணர்வைத் தருகிறது“, என்றுள்ளது.

அதேவேளை 2018 ஜனவரி 5 ம் தேதியில், இரு நீதிபதிகள் அமர்வுடன் முன்னாள் தலைமை நீதியரசர் தீபக் மிஸ்ரா கூறியதன்படி, திரையரங்குகள் தாம் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு, அவர்கள் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்யத் தீர்மானித்தால் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதாகும்.
“தியேட்டரில் தேசிய கீதம் பாடாதவரை தேச விரோதி என எவ்வாறு அழைக்கலாம்?“ இவ்வாறு இரு நீதிபதிகளில் ஒருவரான சந்திர சூட் கேள்வி எழுப்பியிருந்தார்.