நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்தார்

பெங்களூரு

பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் தொட்டரசிகெரா என்னும் ஊரை சேர்ந்தவர் அம்பரீஷ். இவர் கன்னட உலகில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் அவருடன் ப்ரியா உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1972ல் அறிமுகமான இவர் 208 படங்களில் நடித்துள்ளார்.

சுமலதா வுடன் அம்பரீஷ்

அம்பரீஷ் ஜனதா தளம் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை தொடங்கி அதன் பின் காங்கிரஸில் இணைந்தார். இவர் 2006-2007 காலகட்டத்தில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தார். மக்களவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 முதல் 2016 வரை கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.

சில ஆண்டுகளாக் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அம்பரீஷ் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி பெங்களூரு விக்ரம் மருத்துவனமனையில் மரணம் அடைந்தார்.

தற்போது சுமார் 66 வயதாகும் அம்பரீஷின் மனைவி சுமலதாவும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஆவார். இவர்கலுக்கு ஒரு மகன் இருக்கிறார்.