பெங்களூரு:

கர்நாடகா தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று டுவிட்டர் மூலம் மோடிக்கு எதிரான தாக்குதலை நடத்தியுள்ளார். அதன் விபரம்….

டுவிட் 1

அன்புள்ள மோடி, கர்நாடகாவிற்கு நீங்கள் வருவதாக கேள்விப்பட்டேன். உங்களை எங்கள் மாநிலத்திற்கு வரவேற்கிறோம். நீங்கள் இங்கே இருக்கும் போது, கன்னடர்களின் சில விஷயங்களை உங்களை தெரிவிக்க விரும்புகிறோம் என்று டுவிட்டரில் போஸ்ட் செய்து இருக்கிறார். அதில் ‘பதில் சொல்லுங்கள் மோடி’ என்ற ஹேஷ் டேக் உருவாக்கி இருக்கிறார்.

டுவிட் 2

‘‘ஜனார்தனன் ரெட்டி உங்களுடன் பிரச்சாரம் செய்வாரா?. அவர் குடும்பம், நண்பர்கள் என்று மொத்தம் 8 பேருக்கு தேர்தலில் வாய்ப்பு அளித்துள்ளீர்கள். இது பாஜகவிற்கு 10-, 15 இடங்களில் உதவும் என்று நினைத்து வாய்ப்பளித்துள்ளீர்கள். ஆனால் கடைசியில் எங்களுக்கு ஊழல் குறித்து பாடம் நடத்துகிறீர்கள். இத்தகைய கபட நாடகத்தை முதலில் நிறுத்துங்கள். கன்னடர்கள் ஒன்றும் காதில் தாமரை வைத்துக் கொண்டு சுற்றவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

டுவிட் 3

‘‘முதலில் ஊழல் கறைபடிந்த எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தீர்கள். ஆனால் இப்போது நீங்களே அவருடன் ஒரே பிரச்சார மேடையில் தோன்றுவதை தவிர்க்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள். இப்போதும் அவர்தான் உங்களில் முதல்வர் வேட்பாளரா’’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

டுவிட் 4

‘‘பாலியல் குற்றவாளிகளுக்கும் சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு நீங்கள் இந்த தேர்தலில் வாய்ப்பளித்துள்ளீர்கள். உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ.வை பாஜக முதல்வர் ஆதித்யநாத் பாதுகாக்கிறார். உங்கள் கட்சி எம்எல்ஏக்கள் காஷ்மீர் சிறுமி வன்புணர்வை கூட நியாயப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் எதோ கர்நாடகாவில் அதிக பாலியல் குற்றம் நடப்பது போல உங்கள் கட்சி விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

டுவிட் 5

‘‘முதலில் நீங்கள் எல்லோருக்கு 15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அதை தேர்தல் ‘ஜூம்லா’ என்று அமித்ஷா மறுத்தார். வேலை வாய்ப்பு தருவதாக சொல்லிவிட்டு பக்கோடா விற்க சொன்னீர்கள். பணமதிப்பிழப்பு செய்துவிட்டு கருப்பு வரும் என்றீர்கள். ஆனால் மக்களுக்கு கஷ்டம்தான் வந்தது. இப்போது இங்கே வந்து உண்மையான வளர்ச்சியை பார்த்து லாலிபப் என்று அழைக்கிறீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

டுவிட் 6

உங்களின் ஒரே மந்திரம் அனைவருக்கும் வளர்ச்சி என்பதுதான். ஆனால் உங்கள் அரசு ஏழைகளை கைவிட்டுவிட்டது. வங்கிகள் ரூ. 2.71 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு வெறும் வெத்து வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கிறது. விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு தொகை கூட அதிகரிக்கப்படவில்லை. ஆனால் 2022ல் அதை இரட்டிப்பு ஆக்குவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள். உண்மையில் விவசாயிகளின் நலனை நினைத்து பார்க்கிறீர்களா?’’ என்று கேள்வி கேட்டுள்ளார்.