ஹிந்தி எதிர்ப்பில் கன்னடர்கள் வெற்றி!! மெட்ரோ ரெயில் நிலைய அறிவிப்பு பலகைகள் அகற்றம்

பெங்களூரு:

கன்னடர்களின் தொடர் எதிர்ப்பால் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொறுத்தப்பட்டிருந்த ஹிந்தி மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றும் பணி தொடங்கியது. தற்போது வரை 3 ரெயில் நிலையங்களில் இருந்த பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று மொழி கொள்கைக்கு கன்னட அமைப்புகள் மற்றும் முதல்வர் சித்தாராமையா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஆங்கிலம், ஹிந்தி, உள்ளூர் மொழி என 3 மொழிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘‘ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மெட்ரே ரெயில் நிலைய அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் ஹிந்தி மொழி அறிவிப்புகள் இடம் பெற வேண்டும்’’ என்று மத்திய நகர்புற மேம்பாட்டு துறை கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளும், கர்நாடக மேம்பாட்டு ஆணையம், கன்னட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ‘‘எந்த அடிப்படையில் மத்திய அரசு ஹிந்தியை 3வது மொழியாக தேர்வு செய்தது. பெங்களூருவில் ஹிந்தி மொழி பேசுபவர்களை விட தமிழ், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் உள்ளனர்’’ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக முதல்வர் சித்தாராமையா கூறுகையில்,‘‘ கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து தமிழ், தெலுங்கு, குஜராத் மக்கள் தான் அதிகம் உள்ளனர். தெலுங்கு அல்லது தமிழை மூன்றாவது மொழியாக அறிவிக்காமல் மத்திய அரசு ஏன் ஹிந்தியை அறிவித்தது. 2 மொழி கொள்கையில் தான் நம்பிக்கை உள்ளது. அது கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே’’ என்றார்.

இது தொடர்பாக கடந்த 28ம் தேதி முதல்வர் சித்தாராமையா மத்திய வீட்டு வசதி மற்ம் நகர்புற விவகார அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் ‘‘ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற வேண்டும். கர்நாடகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஹிந்தி இல்லாத தற்காலிக அறிவிப்பு பலகைகளை மெட்ரோ ரெயில்நிலையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைதொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகா ரக்ஷனா வேதிக் அமைப்பினர் சில இடங்களில் இருந்த அறிவிப்பு பலகைகளில் கருப்பு மை பூசி ஹிந்தி எழுத்துக்களை அழித்தனர். தொடர் போராட்டம் காரணமாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்த 3 மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

 

கார்ட்டூன் கேலரி