கேரளாவின் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு

கேரளாவின் நான்காவது சர்வதேச விமான நிலையம் திறப்பு

கேரளாவில் நான்காவது சர்வதேச விமான நிலையம் கண்ணூரில் திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர்.

 

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1800 கோடி செலவில் ஒரே நேரத்தில் 2000 பயணிகளை கையளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வரை சேவை அளிக்க முடியும்.  இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை நீளமானது 3,050 மீட்டராகும், இதனை 4,000 மீட்டராக நீட்டிக்கப்படும் வசதியும் இருக்கிறது.

இந்த விமான நிலையத்தில் இருந்து முதல் விமானமாக, 180 பயணிகளை கொண்டு அபுதாபி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

கண்ணூர் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லலாம். மேலும் உள் நாட்டில் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய ஊர்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. கண்ணூர் விமானநிலையம் கேரளாவின் நான்காவது சர்வதேச விமான நிலையம் ஆகும். அதே நேரம், நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ள ஒரே மாநிலம் கேரளா என்று சில ஊடங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.