கான்பூர்

முகக் கவசம் அணிய மறந்து போன உத்தரப் பிரதேச மாநில ஐஜி தனக்குத் தானே ரூ.100 அபராதம் விதித்துக் கொண்டார்.

நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.    இந்த அபராதத் தொகை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஐஜி பதவி வகிக்கும் காவல்துறை அதிகாரி  மோகித் அகர்வால் ஒரு அவசர பணிக்காக வெளியில் சென்று ஆலோசனை செய்யத் தொடங்கினார்.  அவர் முகக் கவசம் அணியாதது அவருக்கே தெரிய வந்தது,   அவர் உடனடியாக வாகனத்தில் வைத்துள்ள தனது முகக் கவசத்தைக் கொண்டு வரச் சொல்லி மாட்டிக் கொண்டார்.

அதே வேளையில் தனது தவற்றுக்காக தனக்கு தானே ரூ.100 அபராதம் விதித்து அதைச் செலுத்தினார்.  இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வேகமாகப்  பரவி வருகிறது.  முகக் கவசத்தின் முக்கியத்தை உணர்ந்து  செயல்பட்ட காவல் அதிகாரி மோகித் அகர்வாலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.