டெல்லி: கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்த் குமார் காலமானதால்.  அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ள தால், தொகுதியில் போட்டியிட மாவட்ட காங்கிரசாரிடையே பலத்த போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த குமார், தொற்று குணமான நிலையில், இணை நோய் பாதிப்பு காரணமாக கடந்த 28 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி காலமானார்.  அவரது உடல், சொந்த  ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 29 ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கன்னியாகுமரி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், குமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் கட்சியை பல தலைவர்கள், மாநில தலைமையையும், மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றுபோன  பொன். ராதாகிருஷ்ணனை மீண்டும் தேர்தலில் நிறுத்த மாநில பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சமீபகாலமாக பாஜக தலைமை மீது மக்களிடையே அதிக அளவிலான அதிருப்தி நிலவி வருவதால், பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சி சார்பில், பிரின்ஸ் உள்பட மூத்த தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட  விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள போட்டிகளை தடுக்கவே, வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்தை களமிறக்க, அவரது உறவினர்கள் உள்பட, குமரி மாவட்டத்தில் பெரும்பான்மை யாக உள்ள நாடார் இன மக்கள் முடிவெடுத்து உள்ளனர்.

தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்திய வசந்தகுமார் எம்.பி.க்கு மாவட்ட மக்களிடையே நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ளது. மேலும்,  தொகுதியின் வெற்றி தோல் வியை நிர்ணயிப்பது நாடார் இன மக்களின் வாக்குகள் என்பதால்,  உடனே தேர்தல் அறிவித்தால், வசந்தகுமாரின் அனுதாப ஓட்டில், விஜய்வந்த் எளிதாக வெற்றி பெற முடியும் என நம்பப்படுகிறது.

இதன் எதிரொலியே விஜய்வசந்தின் பேட்டி என்றும்,  அரசியலில் தனக்கு விருப்பம் இருப்பதாக வும், கட்சி தலைமை அறிவித்தால், போட்டியிட தயார் என்று கூறியுள்ளர்.

அப்பா நண்பர்கள் பலரும் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் தொடங்கி விட்டது. விரைவில் விறுவிறுப்பான  காட்சிகள் அரங்கேறும்.