மும்பை: மகேந்திர சிங் தோனியை விமர்சிப்பது முற்றிலும் முறையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றவருமான கபில்தேவ்.

அவர் கூறியுள்ளதாவது, “ஒருவர் எப்போதுமே 20 வயதுடையவராக செயல்பட முடியாது. நாம் அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. எனவே, தோனியை விமர்சிப்பது முறையற்ற செயல். அவர், பேட்டிங்கில் எப்படி செயல்படுகிறார் என்பதைவிட, அணியின் வெற்றிக்கு அவரின் பங்களிப்பு பல சமயங்களிலும் பலவிதமாக இருந்துள்ளது.

அவர் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். நமது மக்கள், எப்போதுமே தங்களின் ஹீரோக்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தோனியால் தனது 20 வயது காலகட்டங்களில் செயல்பட்டதைப் போன்று, நிச்சயம் இந்த வயதில் செயல்பட முடியாதுதான். வீராத் கோலி போன்ற ஒரு சூடான கேப்டன் அணியில் இருக்கும்போது, தோனி போன்ற ஒரு சாந்தமான நபரும் கட்டாயம் அணியில் அவசியம்” என்றார்.

இந்த உலகக்கோப்பையில் தோனியின் பல ஆட்டங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கர் மற்றும் கங்குலி போன்றவர்களே தோனியின் ஆட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.