இம்ரான்கான் பதவி ஏற்புவிழா: கபில்தேவும் பங்கேற்க மறுப்பு

டில்லி:

பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இம்ரான்கான் இந்த மாதம் பதவி ஏற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்காத நிலையில், அவருடன் கிரிக்கெட் விளையாடிய கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் பாலிவுட் நடிகர்கள் போன்றோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், இம்ரான்கான் அழைப்பை மறுத்து கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது கபில்தேவும், இம்ரான்கான் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை  என்று கூறி உள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து,  சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் இம்ரான்கான் கட்சி ஆட்சி அமைக்கிறது. வரும் 18-ந்தேதி இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவுக்கு,  இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து, கவாஸ்கர் போன் றோருக்கு  அழைப்பு விடுத்திருந்தார்.அதுபோல இந்தி நடிகர் அமீர்கா னுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புத லுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இம்ரான்கானின்  பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று காரணம் கூறி, பாகிஸ்தான் செல்வதை  அவர் தவிர்த்தார்.  இந்த நிலையில் தற்போது கபில்தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.

பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

You may have missed