புதுடெல்லி: ஒரு நிறுவனத்திற்கு இரண்டு மேலாண்மை இயக்குநர்கள் இருக்க முடியாது என்று கூறி, இந்திய அணிக்கு இருவேறு கேப்டன்கள் என்ற பரிந்துரைக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் கபில்தேவ்.

ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மாவை, குறைந்தபட்சம் டி-20 இந்திய அணிக்காகவேனும் கேப்டனாக்க வேண்டுமென்ற குரல்கள் பரவலாக ஒலிக்கத் துவங்கியுள்ளன.

இதுகுறித்து கூறியுள்ள கபில்தேவ், “ஒரு நிறுவனத்தில் இரண்டு மேலாண் இயக்குநர்களை நீங்கள் நியமனம் செய்வீர்களா? விராத் கோலி, டி20 கிரிக்கெட்டில் பங்கேற்றால், அவரே கேப்டனாக இருக்கட்டும். அதை மாற்றக்கூடாது.

வேறு நபர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதைப் பார்க்கவும் விரும்புகிறேன். ஆனால், அது மிகவும் கடினம். இந்திய அணியைப் பொறுத்தவரை, மூன்றுவித கிரிக்கெட்டிற்கும்(டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) 70% முதல் 80% வரை ஒரே வீரர்கள்தான் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும், ஒவ்வொரு கேப்டன் மற்றும் மாறுபட்ட வியூகங்களை அவர்கள் விரும்பமாட்டார்கள். இதன்மூலம் அணியில் பிளவுகள் உண்டாகும்.

அதேசமயம், விராத் கோலி விளையாடாத போட்டிகளில், நாம் வேறு கேப்டனை வைத்து பரீட்சித்துப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றுள்ளார் கபில் தேவ்.