புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதித் திரட்டுவதற்கான கோல்ஃப் போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கலந்து கொள்கிறார். இவருடன் முரளி கார்த்திக்கும் பங்கேற்கிறார்.

இந்தப் போட்டி வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்தி அழிக்க, பல இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிதி வழங்கிவரும் வேளையில், இந்திய கோல்ஃப் வீரர்களும், தங்கள் பங்கிற்கு நிதியளிக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, வரும் ஜூலை மாதம் 11ம் தேதி போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில், இந்திய கோல்ஃப் வீரர்கள் ககன்ஜீத் புல்லர் மற்றும் சுபாங்கர் சர்மா ஆகியோருடன், கிரிக்கெட் நட்சத்திரங்கள் கபில் தேவ் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதில் கபில்தேவும் ககன்ஜீத் புல்லரும் ஒரு அணி, மற்ற இருவரும் இன்னொரு அணி. இப்போட்டியின் மூலம் சுமார் ரூ.1 கோடி நிதித் திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்!

இதுகுறித்து கபில்தேவ் கூறியுள்ளதாவது, “நாடு இதுபோன்ற மோசமான சவால்களை எதிர்கொள்ளும்போது, நம்மால் இயன்ற உதவிகளை செய்வது நமது கடமையாகும். இதுவொரு நல்ல முயற்சி. முன்னணி கோல்ஃப் வீரர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுள்ளார்.

கபில்தேவ் தனது ஓய்வு நேரங்களில் கோல்ஃப் விளையாடுவதும், அவ்வப்போது கோல்ஃப் போட்டிகளில் பங்கேற்பதும் வழக்கமாகும்!