டில்லி

சீன அதிபரிடம் உங்கள் 56 இன்ச் நெஞ்சைக் காட்டி காஷ்மீரைக் காலி செய்யச் சொல்லுங்கள் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னைக்கு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 5000 கிமீ சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.   காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 விலக்கிய போது காஷ்மீர் முழுவதும் இந்தியாவைச் சேர்ந்தது என பாஜக அரசு தெரிவித்திருந்தது.

நேற்று சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி சீன அதிபர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார் எனவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பார் எனவும் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல்  தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மோடி அவர்களே விதி எண் 370 குறித்த விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இம்ரான் கானுக்கு ஆதரவு அளிக்கப் போவதால் நீங்கள் சீன அதிபரிடம் சீன வசம் உள்ள 5000 கிமீ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறச் சொல்லுங்கள்.  அத்துடன் இந்தியாவில் ஹுவாயி நிறுவனத்துக்கு 5ஜி கிடையாது எனப்டஹியும் சொல்லுங்கள்.  உங்கள் 56 இன்ச் நெஞ்சைக் காட்டி இதைச் சொல்லுங்கள்” எனப் பதிந்துள்ளார்.