மோடி உண்மையான இந்து அல்ல : காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

டில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ”மோடி உண்மையான இந்து அல்ல” என கூறி உள்ளார்.

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அப்போது அவர் இந்து அல்லாதோருக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது.  இது குறித்து காங்கிரஸ் தரப்பிலும் பா ஜ க தரப்பிலும் கடும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வருகிறது.

பாஜக தலைவர்கள் ”ராகுல் காந்தி கோவிலுக்கு செல்வதில்லை., இந்து என்றால் தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டனர் தற்போது இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர், “இந்து மதத்தின் உண்மையான அடிப்படை தத்துவத்தை பா ஜ க வினர் அறியவில்லை.  அவர்கள் இந்துத்வா கொள்கையை பின்பற்றுகின்றனர்.   அவர்கள் சொல்வது போல் பார்த்தால் மோடியே உண்மையான இந்து அல்ல.  ராகுல் காந்தி எத்தனை முறை கோவிலுக்கு சென்றார் எனக் கேட்பவர்கள் மோடி தினமும் எத்தனை முறை கோவிலுக்கு செல்கிறார் என்பதையும் அறிவிக்க வேண்டும்.  தினமும் கோவிலுக்கு போகாத மோடி இந்து மதத்தை விட்டு விலக வேண்டும்” எனக் கூறி உள்ளார்.