சென்னை:

மீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்  கோபன்னா மீது காவல்துறையில் புகார் கொடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்.

திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அங்குள்ள திமுகவினரை சீண்டாத நிலையில், திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, காங்கிரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க, அதற்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் பதிலடி கொடுக்க திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கட்சி விரோத  நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் 27ந்தேதி அன்று அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை கராத்தே தியாகராஜன், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன்,   நான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவன் அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். எந்த கட்சிக்கும் போக மாட்டேன். நான் மிகவும் மதிக்கும் தலைவரான ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக இருப்பேன். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக அவர் சில விவரங்களை கேட்டார். நானும் சில விளக்கங்களை அளித்திருக்கிறேன்.

கோபண்ணா

வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் பல தலைவர்கள் பேசினார்கள். ஆனால், எனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருகின்றனர். இது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? அல்லது நேரடியாக வேணுகோபால் எடுத்தாரா? என தெரியவில்லை.

ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை. நான் பேசியது தவறு என்றால், கூட்டத்திலேயே அழகிரி என்னை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விளக்கம் கேட்கவில்லை?

விஜயதாரணி எம்எல்ஏ மோடியை ஆதரித்து பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அழகிரிக்கு தெரியாமல் என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் திமுக மீது பழி போடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் சொத்தை கொள்ளையடித்தவர் கோபண்ணா. புத்தகம் போட்டு கோடிக்கணக் கில் சம்பாதித்தவர். மூடப்பட்ட பத்திரிகையின் பெயரில் பாஸ் அச்சடித்து விற்பனை செய்தவர். அவர் டெல்லியில் இருந்துகொண்டு என் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். அவர் மீது திங்கட்கிழமை சென்னை கமிஷனர் அலுலவகத்தில் புகார் கொடுக்க போகிறேன்.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆ.கோபண்ணா முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ‘ஜவஹர்லால் நேரு : ஆன் இல்லஸ்ட்ரேடட் பையோகிராபி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகத்தை, ஜவஹர்லால் நேருவின் 7,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 700 புகைப்படங்களைத் தொகுத்து வரலாற்று நூலாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.