லோக்பால் நியமனம் என்பது ஒரு தேர்தல் வித்தை: மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி: புதிய லோக்பாலை நியமித்துள்ள மத்திய அரசின் செயல், ஒரு தேர்தல் வித்தை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 5 ஆண்டுகளாக லோக்பால் குறித்து எதையுமே கண்டுகொள்ளாத அரசு, மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் திடீரென லோக்பாலை நியமிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

இது நிச்சயம் ஒரு தேர்தல் கூத்துதான். இதன்மூலம், தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என தம்பட்டம் அடித்துக்கொள்ள வழியேற்படும். கடந்த 4 ஆண்டுகளாக இதை ஏன் செய்யவில்லை என்பதற்கான பதிலை பிரதமர் கட்டாயம் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரை அல்லது இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரை, லோக்பால் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், ஆளுங்கட்சி அதை ஏற்கவில்லை.

தற்போதைய லோக்பால் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. வெறுமனே ஒரு தேர்தல் வித்தை மட்டுமே” என்றார்.

– மதுரை மாயாண்டி