புதுடெல்லி: லோக்பாலை நியமிப்பதற்கான ஆலோசனைக் குழுவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள விடுக்கப்பட்ட மத்திய அரசின் அழைப்பை, 7வது முறையாக நிராகரித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.

இதுகுறித்து கூறப்படுவதாவது; லோக்பால் கூடுவதற்கான தேதிகளை முடிவுசெய்ய 10 நாட்கள் அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கிய பிறகு, கார்கேவை தொடர்புகொண்டது மத்திய அரசு. ஆனால், சிறப்பு அழைப்பாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அழைப்பை, 7வது முறையாகவும் நிராகரித்துவிட்டார் அவர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சிறப்பு அழைப்பாளருக்கு, லோக்பால் நியமிக்கும் விஷயத்தில் எந்தப் பங்களிப்பும் கிடையாது. இத்தகையதொரு முக்கியமான விஷயத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பு அதிகாரமற்று போவதை நான் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் வெறும் 44 உறுப்பினர்களே உள்ளதால், அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கிடைக்காததால், வெறும் சிறப்பு அழைப்பாளர் என்ற முறையிலேயே, கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதால்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க வேண்டுமெனில், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், 10% உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

– மதுரை மாயாண்டி