பென்சன் கிடைக்காமல் ராணுவத்துடன் மல்லுகட்டும் கார்கில் வீரர்

டில்லி:

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் திகேந்திர குமார். 49 வயதாகும் இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியில் இருந்து விலகினார். இவர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்று 5 துப்பாக்கி குண்டுகளை தனது உடலில் வாங்கியவர். இதற்காக இவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கி அரசு கவுரவித்தது.

1999ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த திகேந்திர குமார் உடல் ஊனமடைந்தார். இது தவிர 1993ம் ஆண்டில் இலங்கை மற்றும் காஷ்மீர் குப்வாரா நடந்த போர்களின் போதும் பணியாற்றியுள்ளார்.

ஓய்வுபெற்று 13 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான பென்சன் வழங்கப்படாத நிலை உள்ளது. 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இவர் பென்சன் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். விருப்ப ஓய்வு திட்டத்தில் பணி ஓய்வு பெற்றதால் இந்த பென்சன் கிடையாது என்று மறுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் ராணுவ தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இவருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. அதோடு ராணவத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னரும் முழு அளவிலான பென்சன் வழங்கப்படவில்லை.

இது குறித்து அவரது வக்கீல் எஸ்.பி.சிங் கூறுகையில்.‘‘அவர் 20 ஆண்டுகள் பணிக் காலம் உள்ளபோதும் 15 ஆண்டுகளுக்கான பயன் மட்டுமே வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிக்கான முழு பென்சன் பெற அவர் தகுதியுடையவர்’’என்றார்.

இவருடன் பணியாற்றியவர்கள் இவரை விட கூடுதலாக பென்சன் பெறுகின்றனர். இதற்கு நடைமுறை குளறுபடி தான் காரணம் என்று திகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.