கவுகாத்தி

அசாம் தேசிய குடியுரிமைப் பட்டியலில் மூத்த ராணுவ வீரரும் கார்கில்  போரில் கலந்துக் கொண்டவருமான முகமது சனவுல்லா பெயர் இடம் பெறவில்லை.

அசாம் மாநிலத்தின் மூத்த ராணுவ வீரரான முகமது சனவுல்லா கடந்த 1967 ஆம் வருடம் ஜூலை மாதம் 3 ஆம் தேதிர் பிறந்தவர் ஆவார். இவர் கடந்த 1987 ஆம் வருடம் முதல்  ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சுமார் 30 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி ராணுவப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மகன் ஷோபிதுல் இஸ்லாம் ஒரு வழக்கறிஞர் ஆவார்.

சனவுல்லா அசாம் மாநிலத்தைச் சேராதவர் எனக் கடந்த 2008 ஆம் வருடம் இவர்  மீது அசாம் எல்லைக்காவல் படை அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின்படி 50 வயதான சனவுல்லா ரகசிய வழியின் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்து ஒரு தினக்கூலியாகப் பணி புரிவதாகக் கூறப்பட்டுள்ளது. அதை அடுத்து அவர் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் தனது பிறப்பு, பள்ளி, ராணுவ பணி உள்ளிட்ட சான்றிதழ்களை அளித்தார். அத்துடன் வாக்காளர் பட்டியல் ,நில ஆவணம் ஆகியவற்றையும் அளித்துள்ளார்.

ஆனால் தீர்ப்பாயம் சனவுல்லாவை வெளிநாட்டினர் என அறிவித்தது. அதையொட்டி அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இது  குறித்து சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்திகளில் பிரதமர் மோடியின் பெயரும் இணைக்கப்பட்டன. அதன் பிறகு சனவுல்லா விடுதலை செய்யப்பட்டார். அவர் தனது குடியுரிமை குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அசாம் மாநிலக் குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் வெளியாகியது.அதில் முகமது சனவுல்லாவின் பெயர் இடம் பெறவில்லை. அத்துடன் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டுள்ள அவர் மகனின் பெயரும் இடம் பெறாமல் உள்ளது. அதே நேரத்தில் அவர் மனைவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரத்தில் தங்களால் நடவடிக்கை எடுக்க  முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.