மதுரை,

திராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பெட்ரோல் – கேஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலம் புதிய விரிவாக்க பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களது ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும், மீதமுள்ள 7 பேர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும் தினமும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் பேராசிரியர் ஜெயராமன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.