மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகியது . ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.

கர்ணன் படம் கொடியன்குளத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கொடியன்குளம் பெயரை பொடியன்குளம் என பெயர் வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

கொடியன்குளம் கலவரம் நடந்ததும், உயிர்கள் பறிக்கப்பட்டதும் 1995-ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது. ஆனால், 1998-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்பட்டுள்ளது .

இது வரலாற்றை திரித்து கூறும் செயல் என சமூகவலைத்தளங்களில் எழுதவும், யூடியூபில் வீடியோவாக வெளியிடவும் செய்தனர்.

1997-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டியபோது, மாவீரன் சுந்தரலிங்கனார் பெயர் வைத்த பேருந்துகளில் ஏற மாட்டோம் என ஆதிக்க சாதியினர் கலவரம் செய்தனர். சுந்தரலிங்கனார் பெயரை மாற்றியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, அவரது பெயரை மாற்றி அவருக்கு இழுக்கு சேர்க்க மாட்டேன் என்று ஒட்டு மொத்தமாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சூடிய பெயர்களை மாற்றினார் கருணாநிதி.