V க்ரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 வெளிவந்த கர்ணன் படம் பற்றிப் பார்ப்போம். இந்தப் படத்தில் லால், லட்சுமி பிரியா, யோகி பாபு, ரஜீஷா விஜயன், நடராஜ் சுப்ரமணியம், கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு , RK செல்வா எடிட்டிங், தா. ராமலிங்கம் கலை மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையைக் கையாண்டுள்ளனர்.

கதைச் சுருக்கம்:
முதல் காட்சியிலேயே தனுஷின் தங்கை வலிப்பு வந்து நெடுஞ்சாலையில் துடிதுடித்துக்கொண்டிருக்கிறார், அந்த வழியாகச் செல்லும் எந்த வண்டியும் நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது…ஒரு காக்கைக்கு ஒன்றென்றால் மொத்த காக்கைக்கூட்டமே வந்து விடுகிறதே …மனிதருக்கு மட்டும் ஏன் இந்த அலட்சியம். இந்தக் காட்சியில் இறந்து போகும் பெண்பிள்ளை படம் முழுவதும் அம்மன் முகமூடி அணிந்து தொடர்ந்து வருவது நம்மைச் சிந்திக்கவைக்கிறது.

1997 ல் கதை சுழல்கிறது. தனுஷ் தன் அப்பா அம்மா அக்கா லட்சுமி பிரியா ஆகியோருடன் பொடியன்குளம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். மிகவும் துடிதுடிப்பான இளைஞராய், மண்ணின் பாசத்தையும் மதிப்பையும் பெற்றிருப்பார். இவர் ஊரில் பேருந்து நிறுத்தம் இருக்காது, மக்கள் தொலை தூரம் நடந்து மேலூர் என்ற கிராமம் வரை சென்று பஸ் ஏறவேண்டும். மேலூரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரி கிஷனையையும் அவர் தந்தையையும் அசிங்கப் படுத்துகிறார்கள், தனுஷ் அவர்களை துவம்சம் செய்கிறார். பதிலுக்கு தனுஷை அவர்கள் பழிவாங்க திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு முறை கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்ல பேருந்திற்காக காத்திருக்கும்போது, பஸ் எப்போதும் போல் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை தனுஷும் அவர் ஊரைச்சேர்ந்த இளைஞர்களும் அடித்து நொறுக்குகிறார்கள். இதை விசாரிக்க வருபவர் போலீஸ் அதிகாரி நட்ராஜ். பேருந்து உரிமையாளர் வழக்கு எதுவும் போட வேண்டாம் என்று பின்வாங்குகிறார். இதை தமக்குத் தோல்வியாக நட்ராஜ் எடுத்துக்கொண்டு தனுஷையும் அவர் ஊர் மக்களையும் அமைதியில் வாழ விடுகிறாரா என்பது மீதிக்கதை.

மாரி செல்வராஜின் எழுத்து பல இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது …”மேலூர் பொடியன்குளம்” ஊரின் பெயர்களைப் பார்க்கும் பொழுதே எது மேல் எது கீழ் என்பது தெரியவரும். “யாருக்கு என்ன கொடுக்க முடியுமோ அத தானே நான் கொடுக்கமுடிமும்” என்று தனுஷ் சிரிப்பின்றி கூறும் பொழுதோ, “அவன் பஸ்ஸ உடச்சதுக்கு அடிச்சிருந்தா கூட வலிச்சிருக்காது, இந்த பெயரை ஏன் வச்சன்னு இல்ல அடிச்சான்” என்னும் போதோ மாஸ். டைரக்டர்’ஸ் டச் என்பது படம் முழுவதும் பார்க்க முடிகிறது…கால்கள் கட்டப்பட்ட கழுதை ஒன்று மெதுவாக நகரும்போதோ, ரஜீஷா விஜயன் காதலைச் சொல்ல வரும்பொது காட்டும் இதய வடிவிலான குட்டையோ, காவல் நிலையத்தில் காட்டும் பட்டாம் பூச்சியோ, அம்பேத்கரின் படமோ, கலவரத்தின் போது பட்ட சான்றிதழ்களை காவல்துறை கிழிக்கும் போதோ, சொல்லிக்கொண்டே போகலாம்.

கண்டா வரச்சொல்லுங்க தலைப்புப் பாடல் செவிக்கு விருந்து மட்டுமில்லை…அது ஒரு ஒளிப்பதிவின் கண் கொள்ளாக்காட்சி . தட்டான் தட்டான் பாடல் அனைவரையும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படம் முழுதும் பிரமாதம். ஒரே ஒரு குறை தான் …கதை அழகாகவும் வலியோடும் நகர்ந்து சென்றுகொண்டிருக்கையில் “விட்றாதீங்க இப்போவ்” கேட்பவர்களை தடம்புரளவைக்கிறது. மீண்டும் வலிக்குள் வர கொஞ்சம் தாமதமாகிறது.

தனுஷ் நடிப்பைக் கேட்கவே வேண்டாம்…பின்னி பெடல் எடுக்கிறார். கர்ணனாக மனதில் வாழ்கிறார். குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார். லட்சுமி பிரியா பல இடங்களில் தம் இயல்பான நடிப்பினால் கைத்தட்டல்களைக் குவிக்கிறார். தனுஷ் முதல், தேநீர் கிளாஸ் கழுவும் சிறுவன் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் வரையாமல் செதுக்கியிருக்கிறார் என்று கூறினால் மிகையாகாது.

அசுரன் படம் பார்த்தவர்கள், அந்தப் படத்துடன் ஒப்பிட்டால் கர்ணன் படம் எப்படி என்று கேட்கிறார்கள். அசுரன் படத்தில் முதிர்ச்சி அடைந்த தனுஷ் “விவேகம்” என்றால், கர்ணன் படத்தில் அவர் “வேகம்”. போராடுபவர்கள் தடி எடுப்பது சரியா என்ற கேள்வி விவாதத்திற்குரியதே. இரண்டும் வேறு வேறு தளங்கள்.

மொத்தத்தில் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பதை மிகவும் தேவையான கால கட்டத்தில் உரக்க ஒலித்திருக்கிறார் கர்ணன்.

பத்திரிகை டாட் காம்மின் மதிப்பெண் 4/5.