மூன்றாவது முறையாக ‘கர்ணன்’ திரைப்படத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியான தேதியில் இருந்து தொடங்கிய டைட்டில் கார்டில் இடம்பெற்ற வருட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே ‘கர்ணன்’ திரைப்படம் உருவாகுவதாக படம் வெளியாவதற்கு முன்பே செய்திகள் வெளியாகின.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. உதயநிதி ஸ்டாலின் படத்தில் இடம்பெற்றுள்ள தவற்றை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சுட்டிக்காட்டியதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் அந்த தவறு சரி செய்துவிடுவதாக படக்குழு உறுதி அளித்துள்ளதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதன்பின்னர் ‘கர்ணன்’ படக்குழுவினர் 1997 என்ற வருடத்தை 1990 இறுதியில் என மாற்றினார்கள். அதற்கும் அதிருப்தி குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படத்தில் மூன்றாவது முறையாக வருடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ‘கர்ணன்’ திரைப்படம் சம்பந்தமான சர்ச்சைகள் முற்று பெற்று, தற்போது 50% பார்வையாளர்களுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.