பெங்களூரு:

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தின்மீது இன்று மதியம் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும்  சட்டமன்ற சபாநாயகருக்கு கவர்னர் கெடு விதித்து உள்ளார். இதன் காரணமாக அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. கவர்னர் உத்தரவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா  என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி  அரசுக்கு அளித்து வந்த ஆதாரவை விலக்கிக்கொள்வதாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த 16 எம்எலஏக்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றமும், சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்ததுடன், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான முடிவை சபாநாயகர் தெரிவித்தபிறகே, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் அறிவுரையை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சியின் கொறடா நடவடிக்கை எடுப்பதில் தலையிட மாட்டேன் என்று கூறி, திட்டமிட்டபடி நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானத்தின் மீது விவாதங்களை நடத்தினார்.

இந்த விவாதத்தின்போது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்றே (நேற்று) அரசு மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார்.

இதையடுத்து,  இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கும், சபாநாயகர் காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பா.ஜனதா வினர் புகார் கொடுத்தனர்.

புகாரின்பேரில்,  நள்ளிரவு 12 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்கு மாறு சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் மூலம் கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்திருந்தார். ஆனால், சபாநாயகர் நேற்று மாலை 6 மணிக்கு சபையை ஒத்திவைத்துவிட்டு சென்றுவிட்டார். இதன காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று முதல்வர், குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா எழுதியுள்ள கடிதத்தில்,  கூட்டணி அரசில் அங்கம் வகித்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து இருப்பதுபோல, என்னிடமும் கொடுத்துள்ளனர்.

2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதை திரும்ப பெற்றுள்ளனர். அதுதொடர்பான கடிதங்களையும் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த தருணத்தில் பெரும்பான் மையை நிரூபித்த காட்ட வேண்டியது உங்களது (குமாரசாமி) கடமையாகும். அதனால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட நாளை (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இரவு ஆன பின்னரும் வெளியேறியாத அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரையில் அவையில் இருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவரான எடியூரப்பா படுக்கையை எடுத்துவந்த சட்டப்பேரவை யிலேயே இரவு முழுவதும் படுத்து உறங்கினார். இதேபோல், பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று காலை எம்.எல்.ஏக்கள் பலர் சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்கிங் செய்தனர்.

கவர்னரின் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மீண்டும் சட்டமன்றம் கூடி யுள்ளது.  பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அனைத்துக்கட்சி உறுப்பினர் களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்வது மரபு. ஆனால், நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளி காரணமாக, விவாதங்கள் முடிவடையாத நிலையில், இன்று மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதைத்தொடர்ந்து கவர்னரின் உத்தரவை சபாநாயகர் ஏற்று, மதியம் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்துவாரா அல்லது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டுகொள்ளாதது போல கவர்னரின் உத்தரவையும் கண்டுகொள்ளாமல், தனது பணியை தொடர்வாரா  என்பது ஓரிரு மணி நேரத்திற்குள்  தெரிய வரும்.

இந்திய அரசியல் சாசனப்படி, சபாநாயகர், கவர்னர் போன்றவர்களின் அதிகாரங்களில் உச்சநீதி மன்றம் கூட தலையிட முடியாத அளவுக்கு சட்ட பாதுகாப்பு உள்ள நிலையில், தற்போது சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக சபாநாயகரின் அதிரடி நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் வியந்து நோக்கி வரும் நிலையில், கவர்னரின் உத்தரவுக்கு சபாநாயகர் ரமேஷின் முடிவு என்ன என்பதையும்  இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது…